Sunday, December 17, 2017

குறுங்கதை - அந்த மூன்று மணிநேரம்

காற்றை இலாவகமாக சுழற்றி வீசிக்கொண்டிருந்தது அந்த மின்விசிறி. அதனால் உண்டான சத்தத்தில் மற்ற சத்தங்கள் ஏதும் கேட்கவில்லை அந்த அறையில். பூமுடித்து பொட்டுவைத்து மடிப்புகலையாத அந்த காட்டன் புடவையில் மிகவும் அழகாக இருந்தாள் அவள். அங்குமிங்கும் அவ்வப்பொழுது நடந்துகொண்டே இருந்தாள். திடீரென நின்று என்னையே உற்றுநோக்கினாள். நான் அவளைப் பார்க்காதவன் போல் திரும்பிக்கொண்டேன். நெருங்கிவந்தாள். கொஞ்சமும் சிரிக்கவில்லை. சிலநிமிடங்கள் என்னருகிலேயே நின்றிருந்தாள். சட்டென என்னருகிலேயே அமர்ந்துவிட்டாள். எனக்கோ வியர்த்துவிட்டது. உடனே கண்ணைமூடிக்கொண்டேன். திரும்ப கண்திறந்து பார்க்கையில் மீண்டும் பழையபடி நடந்துகொண்டிருந்தாள்.

எதிர்பாராவிதமாக மின்விளக்கு தன் கண்ணைமூடிக்கொண்டது. மின்விசிறி தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது. மையான அமைதி. உடனே ஒரு சலசலப்பு அங்கே.

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ.....

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மின்விளக்கு கண்சிமிட்டியது. மின்விசிறி ஓடத்தொடங்கியது. சுயநினைவிற்கு வந்தேன். மூன்று மணிநேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை.

திடீரென ஒரு குரல்,

"STOP WRITING" "TIME OVER" "RETURN YOUR PAPERS".

-பித்தன்.

No comments:

Post a Comment