Monday, December 25, 2017

நிறைகுடம் - சிறுகதை

கைப்பிடி உடைந்த தன் சிலேட்டில் அன்றைய வீட்டுப்பாடத்திற்கான வினாவுடன் வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தான் ராஜு. ராஜு மூன்றாம் வகுப்பு மாணவன். பள்ளிமுடிந்ததும் வீட்டிற்கு வந்து கை, கால் முகம் கழுவிவிட்டு, பசித்தால் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தன் வீட்டுப்பாடங்களை செய்வான். செய்து முடித்தபிறகு விளையாடச் செல்வான். வீட்டிற்கு திரும்ப குறைந்தது ஏழு மணியாவது ஆகும்.

அன்று தான் புதிதாக எளிதாகக் கற்ற பின்னக் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலைப் பற்றி சொல்வதற்காக தன் பக்கத்துவீட்டு ராணி அக்காவிடம் சென்றான். ராணி அக்கா +2 முடித்துவிட்டு மேற்படிப்பைத் தொடராமல் வீட்டிலிருக்கும் நடுத்தரவர்க்கத்துக் குடும்பப் பெண்.

ராஜு என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவனுக்கும்தான். அன்று ஏனோ அவளதுமுகம் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் ராஜுவைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

"அக்கா, இன்னக்கி பின்னக் +, -, ×, ÷ எப்படிப்பண்ணறதுனு உங்களுக்கு சொல்லித்தரப்போறேன்" என்றான்.

"அப்டியா, எங்க சொல்லு பாப்போம்" என்றாள்.

கூட்டலும் கழித்தலும் நன்றாகப் பகர்ந்துவிட்டு, பெருக்கலில் திரு திருவென விழித்தான்.

அவன் விழிப்பதை விரும்பாதவள் போல் உடனே அவள் அந்த பின்னப் பெருக்கலைச் சொல்லித் தந்தாள். அசடு வழிந்துகொண்டே நின்றான் அவன். உடனே அவள்,

"டே ராஜு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா"

"சொல்லுக்கா பண்றேன்"

தன் பின்னாலிருந்த பச்சைநிற தோள்பையை ராஜு விடம் நீட்டினாள். அதில் எழுதியிருந்ததை "க...ண்...ண...ன், கண்ணன், ஜூ...வ...ல்...ல...."  என்று எழுத்துக்கூட்டி அவன் சரியாக படித்துக்கொண்டிருந்தபோது,

"இந்தப் பைய எடுத்துகிட்டு மேல்ரோட்டுகிட்ட இருக்குற தண்ணி பம்புகிட்ட போடா" என்றாள்.

"எதுக்குக்கா"

"நீ போடா, நான் சொல்றேன்".

சரி என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு விரைந்தவனை நிறுத்தி, பின்வாசல் வழியே போகச்சொன்னாள். அவனும் பின்வாசல் வழியே சென்றான்.

ஓங்காளியம்மன் கோவில், ஊரிலேயே ஒரே ஒரு டெலிபோன் உள்ள ஜெயந்தி டீச்சர் வீடு, ஸ்கூட்டர் உள்ள பழனிசாமி தாத்தா வீடு இதையெல்லாம் தாண்டி அவன் போய்க்கொண்டிருக்கையில், தூரத்தில் கில்லி கோட்டியுடன் எதிரே வந்தான் கோபி. கோபி ராஜுவின் கிளாஸ்மேட். அந்த வருடம்தான் அவன் பள்ளியில் வந்து சேர்ந்திருந்தாலும், வந்து சேர்ந்த முதல்நாளிலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இப்போது இருவரும் சேர்ந்து மேல்ரோட்டு தண்ணி பம்பிடம் செல்ல முடிவுசெய்து சென்றுகொண்டிருந்தனர். அன்று பள்ளியில் புவனாவின் தலையில் குமார் கொட்டுவைத்ததுபற்றி விவரமாகப் பேசிக்கொண்டே தண்ணி பம்பை வந்தடைந்தனர்.

கொஞ்சநேரத்தில் மஞ்சள் குடத்துடன் அங்கே வந்தடைந்தாள் ராணி அக்கா.

"ஏ...கோபி நீ எங்கடா வந்த..."

"நானும் உனக்கு உதவி பண்லாம்னுதாக்கா வந்தேன்"...

"சரி சரி... ராஜு அந்தப்பையைக் குடுடா"

"இந்தாக்கா"

மஞ்சள் குடமும் பச்சைப் பையும் கைமாறின.

"டேய் ரெண்டு பேரும் இந்த குடத்துல தண்ணி அடிச்சி வைங்க... நான் இப்ப வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு பையுடன் அதே ரோட்டில் நடந்தாள்.

கோபியும் ராஜுவும் அந்த மஞ்சள் குடத்தில் தண்ணீர் நிரப்ப ஆரம்பித்தனர். அந்த குடத்தில் தண்ணீர் நிறைந்து வெகுநேரமாகியும் ராணி அக்கா திரும்பவில்லை. அங்கே தண்ணீர் எடுக்கவந்த வெள்ளையம்மா, "யாருது கண்ணு இந்த கொடம்" என்று கேட்க, "எங்களுதுதான்" என்று கோபி சொல்ல...

"சரி கொடத்த நவுத்து, நான் தண்ணி அடிக்கணும்" என்றாள்.

குடம் நகர்ந்தது. வெள்ளையம்மாள் குடமும் நிறைந்தது. நிரம்பிய குடத்துடன் வெள்ளையம்மாளும் போய்விட்டாள். இன்னும் ராணி அக்கா வரவில்லை. இதற்குள் சூரியனும் தன்பணியை சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீடுதிரும்பியிருந்ததால் இருள் சூழ ஆரம்பித்திருந்தது. இதற்கு மேலும் காத்திருந்தால் ஒரு சோடியம் விளக்குகூட இல்லாத அந்த ரோட்டில் வீடுபோய்ச்சேர முடியாது என்று தீர்மானித்து கிளம்பினர். அப்போதுதான் அந்த குடத்தை என்ன செய்வதென்றறியாமல் விழித்தனர்.

கடைசியாக அந்த நிரம்பிய குடத்தை இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தூக்கிச்சென்றுவிடுவதென முடிவாகி, அந்த மங்கலான ரோட்டில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்துவந்தனர். பல இடங்களில் வைத்து வைத்து தூக்கிவந்து ஒருவழியாக மனோன்மணி டீச்சர் வீட்டின் அருகில் வந்தபோது, டீச்சர், அவர்களின் வீட்டிலிருந்து வெளிப்பட்டார்.

எதிரில் அந்த சிறுவர்களைப் பார்த்ததும், "கோபி, ராணி அப்பாவுக்கு போன் வந்திருக்கு... போய் வரச்சொல்லு" என்று சொன்னார் டீச்சர்.

குடத்தை அங்கேயே வைத்துவிட்டு இருவரும் ராணி அக்கா வீட்டுக்கு ஓடினர். அங்கே ராணி அக்காவின் காது கேட்காத தாத்தாவும் கண்தெரியாத பாட்டியும் மட்டுமே இருந்தனர்.

ராணி அப்பா எங்கே என அந்த முதியவர்களிடம் ராஜு கேட்டுக்கொண்டிருக்கையில், வயலுக்குப் போய்விட்டு வீடு திரும்பிய ராணி அப்பா, "என்ன ராசு.. என்னா கேக்குற தாத்தாகிட்ட" என்றார்.

"உங்களுக்கு போன் வந்திருக்காம்,டீச்சர் வரச்சொன்னாங்க" என்றான் ராஜு.

உடனே கிளம்பிப் போனார் ராணி அப்பா. பின்னாலேயே அந்த சிறுவர்களும் போனார்கள் அங்கே விட்டுவிட்டு வந்த குடத்தை எடுத்துவர. வீட்டை நெருங்கிய ராணி அப்பா, அந்த குடத்தைப் பார்த்துவிட்டு இது தன் வீட்டு குடமாயிற்றே என்ற உணர்வுடன்,...

"இது எப்புடி ராசு இங்க வந்துச்சி" என்று கேட்க, ராஜு நடந்த விவரங்களைச் சொல்ல... அதிர்ந்த குரலில் "இப்ப ராணி எங்க ராசு" எனும்போது டீச்சர் வெளிப்பட்டு "ஐயா உங்களுக்கு போன் வந்திருக்கு, உங்க பொண்ணு பேசுது" என்றார். உடனே சடாரென்று திரும்பி போனைத்தேடி டீச்சர் வீட்டினுள் நுழைந்தார் ராணி அப்பா.

சிறுவர்கள் குடத்தை வீடு சேர்க்கும் பணியைத் தொடர ஆரம்பித்தனர். கோபியும் ராஜுவும் வீடு வந்து சேர்ந்த கொஞ்சநேரத்தில் கவலைதோய்ந்த முகத்துடன் வந்துசேர்ந்தார் ராணி அப்பா. என்னாயிற்று என்று கோபி விசாரித்துக்கொண்டிருக்கையில் ராஜு எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ராணி அப்பா எழுந்து தன் தந்தையின் காதருகில் சென்று,

"நம்ம பொண்ணு மேலக்காட்டு பரமசிவம் பையனோட ஓடிப்போயிட்டாளாம்" என்று அழுதுகொண்டே கத்தி சொன்னார் தன் காதுகேட்காத தந்தையின் காதில் நுழைவதற்காக... அதன்பிறகு அங்கு நடந்தவற்றில் இதுவும் ஒன்று.

"அந்த குடத்துல இருந்த தண்ணிய கீழ கொட்டிட்டு, வெறுங்குடத்தை சுலபமா எடுத்துகிட்டு வந்திருக்கலாம்லடா" என்று ராஜு கோபியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

-பித்தன்.
                                         ****************

Sunday, December 17, 2017

இங்கிலாந்து கவி

ஆல்பியானின் தேம்ஸ் போல்
என் அங்கமெல்லாம் படர்ந்து,
கிரீன்விச்சை மறந்து
கடிகாரம் தொலைத்து,
கூடிச் சிறு மோகம் தவிர்த்து,
ஷெல்லிக்கும் ஷேக்ஸ்பியருக்கும்
ஒரு புது காதல் க(வி)தை கொடு பெண்ணே...

-பித்தன்.

எந்திரன் காதல்...

நிக்கல் தேகம்
மின்னல் வேகம்
இங்கே பாரம்மா...

சிந்தசைசர்
கொஞ்சும் குரலில்
பாட்டுப் பாடட்டா...

என் ஹைவோல்டேஜ் சென்சாரே!!!

நியூரல் ஸ்கீமா
நிறைந்து வழிய
ப்ரோக்ராம் செய்யட்டா...

சின்னச் சின்ன
தப்பையெல்லாம்
Debug பண்ணட்டா...

என் anatomy ன் CPUவே...

என் மெமரியில் எமரி,
பைனரி குமரி...
இடவல பேதம்,
Ambidextrous பூதம்...
Macro கோடிங் ராணி
வாக்கிங் போக வா நீ...

-பித்தன்.

வாலிபக் கவி வாலி

தமிழைப் புடம்போட்டு
தங்கத் தமிழ் தரும்
பொன்னாசான்
என்னாசான்,

முருகுத் திருத் தமிழ்
பருகத் தந்தவன்
பொன்னாசான்
என்னாசான்,

சன்யாசி வேஷம்
தன்யாசி ராகம்,
உன்னாசி வேண்டி
என் நாசி மூச்சுரைக்கும்.

தமிழ்நாட்டின் தாகூரே
தென் தமிழின் தேன்கூடே
சங்கத் தமிழ்
வள்ளுவன் கூறும்
வாலறிவனே...

ஐயன் வாலியின்
எண்பத்தேழாவது பிறந்தநாள் இன்று.❤😘😇😍

-பித்தன்.

குறுங்கதை - அந்த மூன்று மணிநேரம்

காற்றை இலாவகமாக சுழற்றி வீசிக்கொண்டிருந்தது அந்த மின்விசிறி. அதனால் உண்டான சத்தத்தில் மற்ற சத்தங்கள் ஏதும் கேட்கவில்லை அந்த அறையில். பூமுடித்து பொட்டுவைத்து மடிப்புகலையாத அந்த காட்டன் புடவையில் மிகவும் அழகாக இருந்தாள் அவள். அங்குமிங்கும் அவ்வப்பொழுது நடந்துகொண்டே இருந்தாள். திடீரென நின்று என்னையே உற்றுநோக்கினாள். நான் அவளைப் பார்க்காதவன் போல் திரும்பிக்கொண்டேன். நெருங்கிவந்தாள். கொஞ்சமும் சிரிக்கவில்லை. சிலநிமிடங்கள் என்னருகிலேயே நின்றிருந்தாள். சட்டென என்னருகிலேயே அமர்ந்துவிட்டாள். எனக்கோ வியர்த்துவிட்டது. உடனே கண்ணைமூடிக்கொண்டேன். திரும்ப கண்திறந்து பார்க்கையில் மீண்டும் பழையபடி நடந்துகொண்டிருந்தாள்.

எதிர்பாராவிதமாக மின்விளக்கு தன் கண்ணைமூடிக்கொண்டது. மின்விசிறி தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது. மையான அமைதி. உடனே ஒரு சலசலப்பு அங்கே.

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ.....

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மின்விளக்கு கண்சிமிட்டியது. மின்விசிறி ஓடத்தொடங்கியது. சுயநினைவிற்கு வந்தேன். மூன்று மணிநேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை.

திடீரென ஒரு குரல்,

"STOP WRITING" "TIME OVER" "RETURN YOUR PAPERS".

-பித்தன்.

Wednesday, October 5, 2016

கன்னஞ் செவந்த காந்தமே

உள்ள இழுத்த
உயிர் காத்தா
ஊ நெனப்பு
ஊருதே,
கள்ளச் சிரிப்பில்
ஏ பொழப்பு
புத்தம் புதுசா
மாறுதே.
 
கிட்ட நெருங்கி
ஒன்ன பாத்தா
சின்னப் புள்ளதான்
பூவே நீ,
எட்ட இருந்து
சுண்டி இழுக்கும்
கன்னஞ் செவந்த
காந்தமே.
 
கால் நகத்த கை நகத்த
வெட்டிப் போட்ட துண்டு,
பறக்குதடி மெதக்குதடி
ஆகாயத்தில் நின்னு,
நச்சத்திரம் நச்சத்திரம்னு
பேரு வச்சேன்,
வச்சதுல வானத்துல
தேரு வச்சேன்.
 
தூங்கையில ஊ உசுரு
உன்னுதில்ல, நா
ஏங்கையில ஏ உசுரு
கண்ணுக்குள்ள,
ஊ கண்ணுக்குள்ள.
 
நான் கண்டுபுடிச்ச காதலே
உனக்கென்ன வேணும்,
நீ எடுத்த முடிவுக்குத்தான்
வந்தாச்சி நானும்,
கலர் கலரா பட்டாம்பூச்சி
பறக்கல இன்னும்,
காதலுக்கு கடவுள் வாழ்த்து
படிச்சிட வேணும்.
 
பொருத்தமெல்லாம் பத்துக்குமேல்
வேணாம் போடி,
கருத்த நிலா நீ எனக்கு
போதும் வாடி.
 
செவப்புலதான் ஓடுதடி
ரத்தம் எனக்கு, அந்த
ரத்தத்துல பொட்டெடுத்து
வெப்பேன் ஒனக்கு...
 
மஞ்சளுல மால ஒண்ணு தாரேன் பொண்ணே, ஓ
நெஞ்சுலயே வீடுகட்டி
வாழப்போறன்...
 
-பித்தன்.

வானம் வசப்படும்

ஓரங்குல இராஜ்ஜியத்தில்
ஒற்றையாய் வேட்டையாடும்
சிலந்திக்கும் உண்டு
வெற்றி தோல்வி...
 பாரெங்கும் அலைகின்ற
காற்றினை சுவாசிக்கும் மனிதா
உனக்கென்னடா...

வெற்றி உன்னிடத்தில்
உடனே பணியாது.
துளிர்க்கும் நம்பிக்கை
அதற்கு ஈடே கிடையாது...

வேறெங்கும் வேண்டாம்
மண்ணிலே விழு
விதையாய்,
யாரென்று கேட்டால்
நானென்று சொல்
மிகையாய்...

புவியிழு சக்தியை
எதிர்த்து எழு
மரமாய்,
கவியொடு புவனையை
மதித்துவிடு
அளவாய்...

வில்லென வளை
ஈசலைப்போல் உழை.
அம்பெனப் பின்னெழுந்து
முன்னேறு...

வான இராஜாங்கம்
இனி நமது வீட்டுவசதி வாரியம்.
ஆம்,
வானமும் நமக்கு வசப்படும்.

-பித்தன்.